ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை - இந்திய முன்னாள் வீரர்


ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 8 Aug 2023 10:31 AM GMT (Updated: 8 Aug 2023 10:44 AM GMT)

ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைப்பதாக இந்திய முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரில் பின்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரவை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்திவ் பட்டேல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

ஹர்திக் பாண்ட்யா டி20 தொடரில் இரண்டு முக்கிய தவறுகளை செய்து விட்டார். ஒன்று, முதல் டி20 போட்டியின்போது பவர் பிளேயில் அக்சர் பட்டேலை பந்து வீச சொன்னார். அதுவும் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அக்சர் பட்டேல் வீசியதால் அந்த ஓவரில் அதிக ரன்கள் சென்றது. இதேபோன்று இரண்டாவது, டி20 போட்டியில் சாஹலுக்கு 4 ஓவர்கள் கொடுக்காமல் விட்டு விட்டார்.

ஆனால் குஜராத் அணிக்காக ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்ஷிப் சிறப்பாகவே இருந்தது. ஏனெனில் அங்கு அவருக்கு ஆசிஷ் நெஹ்ராவின் ஆதரவு இருக்கிறது. ராகுல் டிராவிட் டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்ற பயிற்சியாளர் கிடையாது. நெஹ்ரா போன்ற துடிப்பான பயிற்சியாளர் டி20 கிரிக்கெட்டிற்கு வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த வெறி இருக்கிறது. ஆனால் அவருக்கு வேண்டிய ஆதரவு கிடைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யாவிற்கு தேவையான ஆதரவை ராகுல் டிராவிட் கொடுப்பதில்லை என நினைக்கிறேன்.

டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை சில தருணங்கள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும். இதனால் ஒவ்வொரு முடிவும் டி20 போட்டியில் முக்கியமானவை. அந்த முடிவுகளை கேப்டன் எடுப்பதற்கு பயிற்சியாளர் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story