முதலிடத்துக்கு முன்னேறும் ஆவலில் ராஜஸ்தான்: குஜராத் அணியுடன் இன்று மோதல்...!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஜெய்ப்பூர்,
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்த போதிலும் கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வியை தழுவியது. குறிப்பாக முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் சதம் அடித்தும் ஜெயிக்க முடியவில்லை.
இதே போல் முதல் 4 ஆட்டங்களில் 3-ல் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் கடைசி 5 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கேப்டன் சஞ்சு சாம்சனும் சமீபத்திய ஆட்டங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்குவதும், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் (கடைசி 5 ஆட்டத்தில் 2 விக்கெட்) விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறுவதும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
இது போன்ற விஷயங்களை சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். ஆனால் ஏற்கனவே குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதாலும், உள்ளூரில் ஆடுவதாலும் அதிக நம்பிக்கையுடன் இறங்குவார்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும்.
நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் கடந்த ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 130 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 5 ரன் வித்தியாசத்தில் குஜராத் தோற்றது ஆச்சரியம் அளித்தது.
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 59 ரன்களுடன் களத்தில் இருந்தும் பலன் இல்லை. ஒரே ஒரு ஆறுதல் அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் தயாராகி வரும் குஜராத் அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் ராஜஸ்தானும் அவர்களுக்கு நிகரான அணி என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.