ரஞ்சி கிரிக்கெட்: டெல்லிக்கு எதிராக சவுராஷ்டிரா அணி 503 ரன்கள் குவிப்பு


ரஞ்சி கிரிக்கெட்: டெல்லிக்கு எதிராக சவுராஷ்டிரா அணி 503 ரன்கள் குவிப்பு
x

நேற்றைய முடிவில் சவுராஷ்டிரா அணி 135 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது.

மும்பை,

38 அணிகள் பங்கேற்றுள்ள 88-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சவுராஷ்டிரா-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் டெல்லி அணி 133 ரன்னில் அடங்கியது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி முதல் நாள் முடிவில் 46 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்து இருந்தது. ஹர்விக் தேசாய் 104 ரன்னுடனும், சிராக் ஜானி 44 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஹர்விக் தேசாய் 107 ரன்னில் இருக்கையில் ரன்-அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய ஷெல்டன் ஜாக்சன் 12 ரன்னில் வீழ்ந்தார். சிராக் ஜானி 75 ரன்னில் கேட்ச் ஆனார். மிடில் வரிசையில் சமர்த் வியாஸ் (54 ரன்),பிரேராக் மன்கட் (64 ரன்) அரைசதம் அடித்தனர்.

நேற்றைய முடிவில் சவுராஷ்டிரா அணி 135 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது. அர்பித் வசவதா 127 ரன்களுடனும், கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story