ரஞ்சி கிரிக்கெட்: டெல்லிக்கு எதிராக சவுராஷ்டிரா அணி இன்னிங்ஸ் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜ்கோட்,
சவுராஷ்டிரா-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் டெல்லி அணி முதல் இன்னிங்சில் 133 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 503 ரன்கள் குவித்து இருந்தது. அர்பித் வசவதா 127 ரன்களுடனும், கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் 24 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
3-வது நாளில் தொடர்ந்து ஆடிய ஜெய்தேவ் உனட்கட் 70 ரன்னிலும், அடுத்து வந்த தர்மேந்திரசிங் ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். அத்துடன் சவுராஷ்டிரா 8 விக்கெட்டுக்கு 574 ரன்னில் டிக்ளேர் செய்தது. வசவதா 152 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்து 441 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 63.5 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் சவுராஷ்டிரா இன்னிங்ஸ் மற்றும் 214 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.