ரஞ்சி கிரிக்கெட்: சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 324 ரன்னில் 'ஆல்-அவுட்'
ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 324 ரன்னில் ‘ஆல்-அவுட் ஆனது.
சென்னை,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் (பி பிரிவு) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து இருந்தது. பாபா இந்திரஜித் 45 ரன்களுடனும், விஜய் சங்கர் 11 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய பாபா இந்திரஜித் 66 ரன்னிலும், விஜய் சங்கர் 53 ரன்னிலும், அடுத்து வந்த ஷாருக்கான் 50 ரன்னிலும் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தனர். தமிழக அணி முதல் இன்னிங்சில் 142.4 ஓவர்களில் 324 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சவுராஷ்டிரா தரப்பில் யுவராஜ் சிங் டோதியா 4 விக்கெட்டும், தர்மேந்திர சிங் ஜடேஜா 3 விக்கெட்டும், சிராக் ஜானி 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்தது. சிராக் ஜானி 14 ரன்னுடனும், சேத்தன் சகாரியா 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தமிழக அணி தரப்பில் சந்தீப் வாரியர், எம்.சித்தார்த், அஜித் ராம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.