ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு - சவுராஷ்டிரா இன்று மோதல் - ஜடேஜா களம் இறங்குகிறார்


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழ்நாடு - சவுராஷ்டிரா இன்று மோதல் - ஜடேஜா களம் இறங்குகிறார்
x

கோப்புப்படம் ANI

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது. காயத்தில் இருந்து தேறியுள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சவுராஷ்டிரா அணிக்காக களம் இறங்குகிறார்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 38 அணிகள் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்-அவுட் சுற்றை நெருங்கி விட்டது. இதன் கடைசி சுற்று லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று முதல் 27-ந் தேதி வரை நடைபெறும் 'பி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

சவுராஷ்டிரா அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிராவுடன் 26 புள்ளிகளுடன் கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டது. தமிழக அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 4 டிராவுடன் 15 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன் கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்டது.

வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்திய அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு எந்தவித போட்டியிலும் ஆடவில்லை. காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் 34 வயது ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்து அவரது இடம் உறுதியாகும்.

இதனால் தனது உடல் தகுதியை சோதித்து பார்ப்பதற்காக ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாட்டுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் களம் இறங்குகிறார். ஜெய்தேவ் உனட்கட், புஜாரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால் சவுராஷ்டிரா அணியை ஜடேஜா வழிநடத்துகிறார்.

பயிற்சிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் பேசுகையில், 'மீண்டும் களம் திரும்புவதை சிறப்பானதாக உணர்கிறேன். இது அணிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் நல்ல பலன் அளிக்கும் என்று நம்புகிறேன். களத்தில் இறங்கி போட்டிக்குரிய 100 சதவீத உடல் தகுதியை எட்டுவது தான் எனது முதல் நோக்கமாகும்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் 20 நாட்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டேன். இருப்பினும் போட்டி சூழல் வித்தியாசமானதாகும். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு ஒரு ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று விரும்பியதால் இந்த போட்டிக்கு வந்தேன். தற்போது உடலில் எந்தவித அசவுகரியமும் இல்லை. 5 மாதத்துக்கு பிறகு முதல்முறையாக சவாலான போட்டியில் விளையாடுகிறேன். எனவே தொடக்கத்திலேயே நம்பிக்கை கிடைக்காது. ஆனால் போகப்போக நிச்சயமாக ஆட்டத்தில் முன்னேற்றம் காண முடியும்' என்றார்.


Next Story