சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் முறியடிப்பார்- ரவி சாஸ்திரி நம்பிக்கை


சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி, தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் முறியடிப்பார்- ரவி சாஸ்திரி நம்பிக்கை
x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது 50-வது சதத்தை பதிவு செய்தார்.

மும்பை,

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.

இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி சதம் (117 ரன்) அடித்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 50-வது சதமாக பதிவானது. இதன் மூலம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவரான தெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதமும், டெஸ்டில் 29 சதமும், 20 ஓவர் போட்டியில் ஒரு சதமும் விளாசி இருக்கும் 35 வயதான விராட் கோலி சர்வதேச போட்டியில் இதுவரை மொத்தம் 80 சதங்கள் கண்டிருக்கிறார். அந்த வகையில் சச்சின் தெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 49 சதமும், டெஸ்டில் 51 சதமும் அடித்து ஒட்டுமொத்தமாக 100 சதங்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (100) அடித்து இருக்கும் தெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'சர்வதேச கிரிக்கெட்டில் தெண்டுல்கர் 100 சதங்கள் அடித்த போது அதனை இன்னொரு வீரரால் நெருங்க முடியும் என்று யாரும் நினைக்கவில்லை. விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களை விளாசியுள்ளார். அதில் 50 சதங்கள் ஒருநாள் போட்டியில் வந்துள்ளது. இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. விராட்கோலியின் அடுத்த 10 ஆட்டங்களில் நீங்கள் மேலும் 5 சதங்களை பார்க்கலாம்.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கை இருப்பதாக நினைக்கிறேன். நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலியினால், தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் முறியடிக்க முடியும்' என்றார்.


Next Story