ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஐயர், இஷான் கிஷன்...ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி


ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஐயர், இஷான் கிஷன்...ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி
x
தினத்தந்தி 29 Feb 2024 5:36 AM GMT (Updated: 29 Feb 2024 6:22 AM GMT)

பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) 2023-24 சீசனுக்கான (அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரை) மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள 30 வீரர்களை நேற்று அறிவித்தது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலின் படி ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய நான்கு பேரும் 'ஏ+' பிரிவில் 7 கோடி ரூபாய்க்கு ஒப்பந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அதேபோன்று ஹர்திக் பாண்ட்யா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆகியோர் 'ஏ' பிரிவில் 5 கோடி ரூபாய் ஒப்பந்த பட்டியலில் இணைந்திருக்கிறார்கள்.

அவர்களை தவிர்த்து சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜெய்ஸ்வால் போன்றோர் 3 கோடி ரூபாய் சம்பள பட்டியலில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளார்கள். மேலும் இளம் வீரர்களான ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாகூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னாய், ஜித்தேஷ் சர்மா, பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், கே.எஸ் பரத் போன்ற வீரர்கள் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே முன்னணி வீரர்களாக அவர்கள் விளையாடி வந்த போதிலும் ரஞ்சி கோப்பையில் விளையாடும் படி கேட்டுக் கொண்ட பி.சி.சி.ஐ.யின் வேண்டுகோளை மதிக்காமல் செயல்பட்டதாக கூறி அவர்கள் இருவரையும் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்கு ஆதரவாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,' கிரிக்கெட்டில் கம்பேக் என்பது உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் சவால்களை எதிர்கொண்டு வலுவாக திரும்பி வாருங்கள். உங்களது கடந்த கால சாதனைகள் உங்களை பறை சாற்றுகின்றன. நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story