மெதுவாக பந்துவீசியதாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்


மெதுவாக பந்துவீசியதாக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்
x

கோப்புப்படம்

ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான போட்டியில் மெதுவான பந்துவீசியதாக கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூரு,

10 அணிகள் இடையிலான 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன் தினம் மாலை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது.

பெங்களூரு கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு விலாபகுதியில் பிரச்சினை இருப்பதால் முந்தைய ஆட்டத்தை போன்றே பேட்டிங் மட்டும் செய்து விட்டு 2-வது இன்னிங்சில் மாற்று வீரருக்காக வெளியில் வைப்பது என்ற அடிப்படையில் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். இதனால் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றார்.

'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் முதலில் பெங்களூவை பேட் செய்ய அழைத்தார். இதன்படி 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்து அடங்கியது. மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் பெங்களூரு அணி 7 ரன் வித்தியாசத்தில் 'திரில்'வெற்றியை ருசித்தது. 7-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 4-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு 3-வது தோல்வியாகும்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான போட்டியில் மெதுவான பந்துவீசியதாக கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஐ.பி.எல். நடத்தை விதிகளின் கீழ், இந்த சீசனில் பெங்களூரு அணி இரண்டாவது குற்றமாக இருப்பதால், கோலிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி விளையாடும் லெவன் அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும், மாற்று ஆட்டக்காரர் உட்பட, ரூ. 6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story