ரோகித் பெரிதாக எதுவும் செய்யவில்லை ...இந்தியாவின் வெற்றிக்கு அவர்கள்தான் காரணம் - ஸ்வான்


ரோகித் பெரிதாக எதுவும் செய்யவில்லை ...இந்தியாவின் வெற்றிக்கு அவர்கள்தான் காரணம் - ஸ்வான்
x

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா பெரிதாக எதுவும் செய்து வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை என்று ஸ்வான் கூறியுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி 2012க்குப்பின் சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் சாதனையை தக்க வைத்துக்கொண்டது.

முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய இந்தியா பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஜெய்ஸ்வால், கில் போன்ற இளம் வீரர்களும் சர்பராஸ் கான், துருவ் ஜூரெல் போன்ற அறிமுக வீரர்களும் சிறப்பாக விளையாடி இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

அதே சமயம் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து கே.எல். ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் விலகியபோது தடுமாறிய இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த வெற்றியில் பங்காற்றினார் என்றால் மிகையாகாது.

இந்நிலையில் இந்த தொடரில் பென் ஸ்டோக்சை விட கேப்டனாக ரோகித் சர்மா பெரிதாக எதுவும் செய்து வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்வான் கூறியுள்ளார். மேலும் அஸ்வின், பும்ரா போன்ற இந்திய பவுலர்கள்தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட விடாமல் அவுட்டாக்கி இந்தியாவுக்கு வெற்றி பெற்று கொடுத்ததாகவும் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமீபத்தில் பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "ரோகித் சர்மா கேப்டனாக உயர்ந்தவர் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் அவருடைய பவுலர்கள்தான் இந்தியாவின் வெற்றிக்கு காரணம். ரோகித் சர்மா நன்றாக செயல்பட்டார். ஆனால் அதற்காக நீங்கள் இதை எடுத்துக்கொண்டு பென் ஸ்டோக்ஸ் மோசமாக கேப்டன்ஷிப் செய்தார் என்று சொல்ல முடியாது.

உண்மையாக இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பவுலர்கள் அவருக்கு சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் முதல் போட்டியில் அசத்தவில்லை. ஆனால் கடைசி 4 போட்டிகளில் ரோகித் சர்மாவுக்கான வேலையை சரியாக செய்தனர். எடுத்துக்காட்டாக 100-வது போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் எடுத்தது அபாரமானதாகும். அதை நான் பார்க்கவில்லை. விரைவில் அவரை சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளேன். அவர் 100-வது போட்டியில் விளையாடிய வீரர்களில் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அதற்காக அஸ்வினுக்கு தலை வணங்க வேண்டும்" என்று கூறினார்.


Next Story