தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிக்காமல் அணியின் வெற்றிக்காக ரோகித் சர்மா விளையாடினார் - சோயப் அக்தர்


தனிப்பட்ட சாதனைகள் குறித்து யோசிக்காமல் அணியின் வெற்றிக்காக ரோகித் சர்மா விளையாடினார்   - சோயப் அக்தர்
x

இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார்.

கராச்சி,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின. இதில் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்து பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் ரோகித் சர்மா குறித்த தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். -

இது குறித்து அவர் கூறுகையில்;- 'இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே ரோகித் சர்மா ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். என்னை பொறுத்தவரை இந்த உலகக்கோப்பையை வெல்ல முழுக்க முழுக்க தகுதியான ஒரு வீரர் என்றால் அது ரோகித் சர்மாதான். ஏனெனில் தனது தனிப்பட்ட சாதனைகளை பற்றி யோசிக்காமல் அணி வெற்றிபெற வேண்டும் என்று மட்டுமே அவர் விளையாடினார். இந்த கோப்பையை அவர் எப்படி ஜெயிக்கவில்லை என்பதை பற்றிதான் யோசித்து கொண்டு இருக்கிறேன். உண்மையிலேயே இந்த கோப்பையை கைப்பற்றாத ரோகித் சர்மாவை நினைத்தால் எனக்கு வருத்தமாக உள்ளது'என்று கூறினார்.


Next Story