நாக்பூர் டெஸ்ட்: ரோகித் சதம் - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 144 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா...!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அரைசதம் அடித்துள்ளனர்.

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 177 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் சர்மா 56 ரன்னுடன் களத்தில் இருந்தார். தொடர்ந்து இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது.

ரோகித், அஷ்வின் ஆட்டத்தை தொடங்கினர். இதில் அஷ்வின் 23 ரன்னில் அவுட் ஆனார். ஒருபுறம் கேப்டன் ரோகித் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. புஜாரா 7 ரன், கோலி 12 ரன், சூர்யகுமார் யாதவ் 8 ரன் ஆகியோர் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இதையடுத்து கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா நிலைத்து நின்று ஆடினார். இந்நிலையில் பொருமையாக ஆடிய ரோகித் சதம் அடித்து அசத்தினார்.

அவர் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸின் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களம் இறங்கிய பரத் 8 ரன்னில் ஆட்டம் இழக்க அடுத்ததாக ஜடேஜாவுடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் சேர்த்துள்ளது. ஜடேஜா 66 ரன், அக்சர் படேல் 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி இதுவரை 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக ஆட்டக்காரர் மர்பி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 3ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.



Next Story