தென் ஆப்பிரிக்காவில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை சச்சினை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - ஆலன் டொனால்ட்


தென் ஆப்பிரிக்காவில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை சச்சினை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் - ஆலன் டொனால்ட்
x
தினத்தந்தி 2 Jan 2024 1:15 PM GMT (Updated: 2 Jan 2024 1:23 PM GMT)

தென் ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு இந்திய வீரர் சச்சின் மட்டும்தான்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.

அதன்படி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பேட்டிங்கில் ராகுல் மற்றும் கோலி தவிர மற்ற இந்திய வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பாக விளையாடிய ஒரேயொரு இந்திய வீரர் சச்சின்தான் என்றும், தற்போதைய இந்திய அணி வீரர்கள் அங்கு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'தென் ஆப்பிரிக்காவில் எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஒரே ஒரு இந்திய வீரர் சச்சின் மட்டும்தான். மிடில்-ஸ்டம்பில் நின்று விளையாடிய அவர் தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை அவர் நினைத்ததுபோல பந்துவீச வைப்பதில் வல்லவர். ஆடுகளத்தில் முன்னேறி வந்து விளையாடி, பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் போட்டு அவர் நினைத்த இடத்தில் வீசவைப்பார். அதேபோல அடிக்க வேண்டிய பந்தை மட்டும் அடித்து, மற்ற பந்துகளை அற்புதமாக விட்டுவிடுவார். எனவே தற்போதைய இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் " என்று கூறினார்.


Next Story