சதம் அடித்து அசத்திய ஜோஸ் பட்லர்: பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் அணி


சதம் அடித்து அசத்திய ஜோஸ் பட்லர்: பெங்களூருவை வீழ்த்திய ராஜஸ்தான் அணி
x
தினத்தந்தி 6 April 2024 5:38 PM GMT (Updated: 6 April 2024 7:44 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.

ஜெய்ப்பூர்,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் அனுஜ் ராவத்துக்கு பதிலாக அறிமுக வீரராக சவுரவ் சவுகான் இடம் பிடித்தார்.

'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட்கோலி, கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர் பிளேயில் (முதல் 6 ஓவரில்) விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்த அந்த அணி11.2 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது.

அணியின் ஸ்கோர் 125 ரன்னாக உயர்ந்த போது (14-வது ஓவரில்) பாப் டு பிளிஸ்சிஸ் 44 ரன்னில் (33 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் தூக்கி அடித்து பவுண்டரி எல்லையில் ஜோஸ் பட்லரிடம் சிக்கினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன்னில் நன்ரே பர்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதைத்தொடர்ந்து களம் புகுந்த சவுரவ் சவுகான் 9 ரன்னில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி, நன்ரே பர்கர், ரியான் பராக், யுஸ்வேந்திரா சாஹல் ஆகியோரின் பந்து வீச்சில் சிக்சர் விளாசி அமர்க்களப்படுத்தியதுடன், 19-வது ஓவரில் சதத்தை (67 பந்தில்) எட்டினார். ஐ.பி.எல். தொடரில் விராட்கோலி அடித்த 8-வது சதம் இதுவாகும். அத்துடன் நடப்பு தொடரில் இது முதல் சதமாக பதிவானது.

20 ஓவர்களில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. விராட்கோலி 113 ரன்களுடனும் (72 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), கேமரூன் கிரீன் 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டும், நன்ரே பர்கர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (0) முதல் ஓவரிலேயே ரீஸ் டாப்லே பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன், தொடக்க வீரர் ஜோஸ் பட்லருடன் கைகோர்த்தார். இந்த கூட்டணி நிலைத்து நின்று சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்தது. ஸ்கோர் 148 ரன்னை எட்டிய போது சஞ்சு சாம்சன் 69 ரன்னில் (42 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) முகமது சிராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரியான் பராக் (4 ரன்), துருவ் ஜூரெல் (2 ரன்) ஆகியோர் நிலைக்கவில்லை.

மறுமுனையில் கடைசி வரை களத்தில் நின்று கலக்கிய ஜோஸ் பட்லர் சிக்சர் அடித்து அணி வெற்றி இலக்கை எட்ட வைத்ததுடன், தனது சதத்தையும் பூர்த்தி செய்தார். ஐ.பி.எல். தொடரில் 100-வது ஆட்டத்தில் ஆடிய அவர் அடித்த 6-வது சதம் இதுவாகும்.

19.1 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 100 ரன்களுடனும் (58 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), ஹெட்மயர் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி தரப்பில் ரீஸ் டாப்லே 2 விக்கெட்டும், யாஷ் தயாள், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். விராட் கோலி சதம் அந்த அணிக்கு பயன் அளிக்கவில்லை.

ராஜஸ்தான் 4-வது வெற்றி

4-வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்து முதலிடத்துக்கு முன்னேறியது, 5-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூருவுக்கு விழுந்த 4-வது அடி இதுவாகும்.


Next Story