இலங்கைக்கு எதிரான தொடர்; விராட், ரோகித்துக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்


இலங்கைக்கு எதிரான தொடர்; விராட், ரோகித்துக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - இந்திய முன்னாள் வீரர்
x

கோப்புப்படம்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

டி20 தொடரை அபாரமாக கைப்பற்றிய இந்தியா ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததற்கு ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரின் பேட்டிங் வரிசையை மாற்றியது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும், இத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓய்வெடுக்க விரும்பினர். ஆனால் கம்பீரின் முடிவால் விராட் மற்றும் ரோகித் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றனர்.

இந்நிலையில், இத்தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு பயிற்சியாளர் கம்பீர் ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்ததாக 2 - 3 மாதங்கள் கழித்து தான் விளையாட உள்ளது. இது நமக்கு அரிதானது. எனவே விராட், ரோகித் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வு கொடுத்து மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளர் என்பதால் அனுபவ வீரர்களுடன் கொஞ்சம் நேரத்தை செலவிட விரும்புகிறார் என்பது தெரிகிறது.

ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரைப் பற்றி கம்பீர் தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை. விராட், ரோகித்திடம் சமமான உரிமையை பெறுவதற்கு கம்பீர் வெளிநாட்டு பயிற்சியாளர் கிடையாது. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் அடுத்த தொடரில் விராட், ரோகித்தை விளையாட வைத்து விட்டு கம்பீர் இத்தொடரில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இது தவறான அணுகுமுறை என்று நான் சொல்லவில்லை. ஆனால் இது இத்தொடரின் ஒரு திட்டமாக இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story