பாலியல் வன்கொடுமை புகார்: நேபாள கிரிக்கெட் கேப்டனை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு


பாலியல் வன்கொடுமை புகார்: நேபாள கிரிக்கெட் கேப்டனை கைது செய்ய வாரண்ட் பிறப்பிப்பு
x

பாலியல் வன்கொடுமை புகாரை அடுத்து நேபாள கிரிக்கெட் கேப்டனை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு,

நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் சந்தீப் லமிச்சானே. சுழற்பந்து வீச்சாளராக சிறப்புடன் விளையாடிய சந்தீப், கடந்த ஆண்டு தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சந்தீப் மீது கவுசாலா பெருநகர காவல் துறையிடம் 17 வயது டீன்-ஏஜ் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார். அதில், நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம்.

என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார் என அந்த சிறுமி குற்றச்சாட்டாக கூறியுள்ளார். தன்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார் என்றும் அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியின் காவல் துறை உயரதிகாரி ரவீந்திர பிரசாத் தனூக் கூறும்போது, இதுபோன்ற தீவிர சம்பவங்களில் போலீசார் அதிக கவனம் செலுத்தி விசாரணை நடத்துவார்கள். சிறுமிக்கு சுகாதார பரிசோதனை நடத்தியுள்ளோம். இன்று வழக்கு பதிவாகி உள்ளது. விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளோம் என கூறியுள்ளார். புகாரின்படி, கடந்த ஆகஸ்டு 21-ந்தேதி பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 17-வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் பதிவானதை அடுத்து 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் நேபாள கேப்டன் சந்தீப் லமிச்சானை இன்று கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தீப் லமிச்சானே விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.


Next Story