'சீனியர் உலகக் கோப்பையை வெல்வதே அடுத்த இலக்கு' - இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா பேட்டி


சீனியர் உலகக் கோப்பையை வெல்வதே அடுத்த இலக்கு - இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா பேட்டி
x

image courtesy: ICC twitter

பெண்கள் சீனியர் உலகக் கோப்பையை வெல்வதே அடுத்த இலக்கு என்று இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா கூறினார்.

புதுடெல்லி,

தென்ஆப்பிரிக்காவில் நடந்த பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலகக் கோப்பை இது தான்.

அடுத்து இதே தென்ஆப்பிரிக்காவில் 10 அணிகள் பங்கேற்கும் 8-வது சீனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 10-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதிலும் இந்தியா அசத்துமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜூனியர் உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திய 19 வயதான ஷபாலி வர்மா, சீனியர் அணியிலும் பிரதான பேட்டராக அங்கம் வகிக்கிறார். ஜூனியர் கோப்பையை வென்றதும் இந்திய வீராங்கனைகள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டனர். பேட்டி அளித்த போது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஷபாலி வர்மாவின் கண்களும் குளமாகின. பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஷபாலி வர்மா கூறியதாவது:-

என்னிடம் என்ன இலக்கு இருக்கிறதோ அதில் எனது முழு கவனமும் இருக்கும். அந்த வகையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் நுழைந்தபோது, உலகக் கோப்பையை வெல்வதில் மட்டுமே எனது முழு கவனமும் இருந்தது. வீராங்கனைகளிடம் நான் சொன்ன ஒரே விஷயம், 'உலகக் கோப்பையை வென்றாக வேண்டும். அதற்காகத் தான் இங்கு வந்திருக்கிறோம்' என்பது தான். அதை இன்று செய்து காட்டியிருக்கிறோம். இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையோடு அடுத்து சீனியர் உலகக் கோப்பை போட்டிக்கு செல்வேன். இந்த வெற்றியை மறந்து விட்டு சீனியர் அணியினருடன் கைகோர்த்து அந்த உலகக் கோப்பையை வெல்ல முயற்சிப்பேன்.

2020-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நாங்கள் ஆஸ்திரேலியாவிடம் (87 ரன் வித்தியாசம்) தோல்வியை தழுவினோம். அன்றைய தினம் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாளாக அமைந்தது. ஆனால் அதில் வெற்றி பெற முடியாமல் போன போது, வேதனை தாங்க முடியாமல் அழுதேன். இன்றைய தினமும் அழுதோம். ஆனால் இது வெற்றிக்களிப்பில் வெளிப்பட்ட ஆனந்த கண்ணீர். ஏனெனில் நாங்கள் எதற்காக இங்கு வந்தோமோ அதை சாதித்து விட்டோம். உணர்ச்சியை கட்டுப்படுத்த முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

என்னை பொறுத்தவரை இதை மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். இதில் கிடைத்த அனுபவங்களில் இருந்து மேலும் கற்றுக்கொள்வேன். இந்தியாவுக்காக தொடர்ந்து நிறைய ரன்கள் குவிக்க முயற்சிப்பேன். இந்த ஒரு உலகக் கோப்பையோடு மனநிறைவு அடைந்துவிட போவதில்லை. இது வெறும் தொடக்கம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மா ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் 7 ஆட்டங்களில் களம் இறங்கி 172 ரன்களுடன், 4 விக்கெட்டும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story