முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஷாஹீன் அப்ரிடி


முதல் ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஷாஹீன் அப்ரிடி
x

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்து உள்ளார்.

லண்டன்

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் இங்கிலாந்திலும் விடாலிட்டி பிளாஸ்ட் 20 ஓவர் தொடர் நடந்து வருகிறது. 18 அணிகள் இரண்டு குழுக்களாக (சவுத் மற்றும் நார்த்) பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நார்த் குரூப் பிரிவில் உள்ள நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் வார்விக்ஷயர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.

இதில் டாஸ் வென்ற வார்விக்ஷயர் அணியின் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த நாட்டிங்ஹாம்ஷயர் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் மூர்ஸ் 73 ரன்கள் எடுத்தார். வார்விக்ஷயர் அணி தரப்பில் ஹசன் அலி மற்றும் லிண்டொட் தலா 3 விக்கெட்களும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர்.

இதனையடுத்து, 169 ரன்கள் இலக்குடன் வார்விக்ஷயர் அணிவிளையாடியது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக அலெக்ஸ் டேவிஸ் – ராபர்ட் யேட்ஸ் ஜோடியில், அலெக்ஸ் டேவிஸ் நாட்டிங்ஹாம்ஷயர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி வீசிய முதல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கிறிஸ் பெஞ்சமின் 2வது பந்தை எதிர்கொண்ட நிலையில், ஸ்கூப் ஷாட் ஆட முயன்று கிளின் போல்டுஆனார்.

2 பந்துகள் தாக்குபிடித்த டான் மவுஸ்லி ஷாஹீன் அப்ரிடி வீசிய 5வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த எட் பர்னார்ட் போல்ட் அவுட் ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினார். இதன்மூலம், ஷாஹீன் அப்ரிடி ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். முதல் ஓவரிலேயே ஷாஹீன் இந்த சாதனையை செய்து அசத்தி இருந்தார்.

ஷாஹீன் அப்ரிடி இந்த போட்டியில் 7.20 என்ற எகானமியுடன் 4 ஓவர்களில் 29 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், இந்த போட்டியில் ஒரு மெய்டன் ஓவரை வீசி அசத்தி இருந்தார்.

விளையாட்டு வரலாற்றில் இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்தியதில்லை.




Next Story