ஷிவம் துபே அதிரடி... 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..!


ஷிவம் துபே அதிரடி... 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..!
x

image courtesy: BCCI twitter

17.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

மொகாலி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்கள் அடித்த நிலையில் குர்பாஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே சத்ரன் 25 ரன்கள் அடித்த நிலையில் ஷிவம் துபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் முகமது நபி மட்டுமே சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை.

20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா டக்அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 23 ரன்களும் திலக் வர்மா 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷிவம் துபே அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். மற்றொருபுறம் ஜிதேஷ் வர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில் 17.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஷிவம் துபே 60 ரன்னும் ரிங்கு சிங் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Next Story