ஸ்ரேயாஸ் அரைசதம்: பெங்களூருவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா


ஸ்ரேயாஸ் அரைசதம்: பெங்களூருவுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா
x

image courtesy: @IPL

தினத்தந்தி 21 April 2024 11:58 AM GMT (Updated: 21 April 2024 12:24 PM GMT)

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஈடன் கார்டனில் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் - சால்ட் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் நரைன் தடுமாறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் அதிரடியில் வெளுத்து வாங்கினார். வெறும் 14 பந்துகளில் 48 ரன்கள் குவித்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே தடுமாறிய நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரகுவன்ஷி 3, வெங்கடேஷ் அய்யர் 16 மற்றும் ரிங்கு சிங் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுபுறம் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிலைத்து விளையாடினார். அரை சதம் அடித்த அவர் கிரீன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.கடைசி கட்டத்தில் ரசல் மற்றும் ரமன்தீப் அதிரடியாக விளையாடினர். ரசல் 20 பந்துகளில் 27 ரன்களும், ரமன்தீப் 9 பந்துகளில் 32 ரன்களும் அடித்தனர்.

இதன் மூலம் 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 50 ரன்களும், சால்ட் 48 ரன்களும் அடித்தனர். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story