ரஞ்சி கோப்பையிலும் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்


ரஞ்சி கோப்பையிலும் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்
x

image courtesy; AFP

ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதியில் தமிழகம் - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய ஒரு அரையிறுதியில் தமிழக அணி, 41 முறை சாம்பியனான மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தனது முதல் இன்னிங்சை விளையாடிய தமிழகம் 146 ரன்களில் சுருண்டது.

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பைக்கு பிரித்வி ஷா 5, பூப்பேன் லால்வாணி 15 ரன்களில் அவுட்டானார்கள். அதன் பிறகு களமிறங்கிய முஷீர் கான் நிதானமாக விளையாடினார். ஆனால் மறுமுனையில் மொகித் அவஸ்தி 2, கேப்டன் ரகானே 19 ரன்களில் தமிழக கேப்டன் சாய் கிஷோர் சுழலில் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்வதற்காக களமிறங்கினார். குறிப்பாக ரஞ்சி கோப்பையில் விளையாடாததால் 2023 - 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளில் ஸ்ரேயாஸ் ஐயர் தடுமாறி அவுட்டாகும் பலவீனத்தைக் கொண்டுள்ளார்.

அந்த பலவீனத்தை பயன்படுத்திய சந்திப் வாரியர் அவருக்கு எதிராக முதல் ஓவரிலேயே பவுன்சர் பந்துகளை போட்டு அச்சுறுத்தலை கொடுத்தார். அதன் காரணமாக சுதாரித்த ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த ஓவரில் அவருடைய பந்தை இறங்கி சென்று அடிக்க முயற்சித்தார். அதனால் அடுத்த பந்தில் சந்திப் வாரியர் லென்த்தை குறைத்து வீசினார். அதை சரியாக கணித்து விளையாட தவறிய ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

தற்போது வரை மும்பை 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் அடித்துள்ளது. இது தமிழக அணியை விட 42 ரன்கள் கூடுதலாகும்.

1 More update

Next Story