ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்..... ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!


ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்..... ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
x

image courtesy; twitter/ @BCCI

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார்.

பெங்களூரு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணி வீரர்கள் ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும், கெய்க்வாட் 10 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிறிது நேரம் அதிரடி காட்டிய ஜித்தேஷ் சர்மாவும் 24 ரன்களில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து விளையாடினார். அவருக்கு ஆல் ரவுண்டர் அக்சர் படேல் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அக்சர் படேல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 161 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பென் துவர்ஷுயிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Next Story