மெதுவாக பந்து வீச்சு: கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம்


மெதுவாக பந்து வீச்சு: கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு அபராதம்
x

பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல்.நிர்வாகம் விதித்துள்ளது.

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை பதம் பார்த்து 5-வது வெற்றியை தனதாக்கி 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிப்பதுடன், அந்த அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கும் வஞ்சம் தீர்த்தது.

இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி ஷிகர் தவானின் (57 ரன்கள்) அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்த போது ரிங்கு சிங் (21 ரன்கள், 10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பவுண்டரி விளாசி அணி வெற்றி இலக்கை எட்டவைத்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் (42 ரன்கள், 23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்கவில்லை. பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டதால் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல்.நிர்வாகம் விதித்துள்ளது.


Next Story