ரூ 3.40 கோடிக்கு ஏலம் - வீராங்கனைகளுடன் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஸ்மிர்தி மந்தனா...! - வீடியோ
பெண்கள் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
மும்பை,
ஆண்கள் ஐபிஎல் போன்று முதல் முறையாக பெண்களுக்கும் ஐபிஎல் போட்டி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீராங்கனைகளை பல அணிகள் ஏலத்தில் எடுத்து வருகின்றன. ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவை 3.40 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் பெண்கள் ஐபிஎல் தொடரான பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் அதிகபட்ச ஏலத்தொகைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிர்தி மந்தனா பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஏலம் நடைபெறுவதை இந்திய வீராங்கனைகள் தொலைக்காட்சிகள் பார்த்து வருகின்றனர். பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியினர் அங்கிருந்தவாறு பெண்கள் பிரிமியர் லீக் ஏலத்தை தொலைக்காட்சியில் பார்த்து வருகின்றனர்.
அப்போது, ஸ்மிர்தி மந்தனாவை பெங்களூரு அணி 3.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தபோது அதை இந்திய பெண்கள் அணியினர் கொண்டாடினர். ஸ்மிர்தி மந்தனாவும் சக வீராங்கனைகளுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.