தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்


தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இன்று தொடக்கம்
x

கோப்புப்படம்

தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

செஞ்சூரியன்,

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரில் ஏற்கனவே இறுதி சுற்று வாய்ப்பை இழந்து விட்ட தென்ஆப்பிரிக்க அணி புதிய கேப்டன் பவுமா தலைமையில் களம் இறங்குகிறது. முன்னாள் கேப்டன் டீன் எல்கர், மார்க்ராம், கீகன் பீட்டர்சன், மார்கோ ஜேன்சன், ஹென்ரிச் கிளாசென், கேஷவ் மகராஜ், அன்ரிச் நோர்டியா, ரபடா உள்ளிட்ட வீரர்கள் அந்த அணிக்கு வலுசேர்க்கிறார்கள்.

பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியில் தேஜ்நரின் சந்தர்பால், ஜெர்மைன் பிளாக்வுட், கைல் மேயர்ஸ், ஜாசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கெமார் ரோச் உள்ளிட்ட திறமையான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். என்றாலும் உள்ளூரில் பலம் வாய்ந்த அணியாக திகழும் தென்ஆப்பிரிக்காவின் சவாலை வெஸ்ட் இண்டீஸ் சமாளிக்குமா? என்பது கேள்விக்குறி தான். அத்துடன் செஞ்சூரியன் ஸ்டேடியம் தென்ஆப்பிரிக்க அணிக்கு மிகவும் ராசியானதாகும். அந்த அணி இங்கு இதுவரை ஆடிய 27 டெஸ்ட் போட்டிகளில் 24-ல் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் கூறுகையில், 'தென்ஆப்பிரிக்க அணியில் உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களும் சில சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். எனவே நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு மணி நேரமாக ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மணி நேரமாக, ஒவ்வொரு பகுதியாக ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தால், எங்களால் நன்றாக செயல்பட முடியும்' என்றார்.

இவ்விரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 20-ல் தென்ஆப்பிரிக்காவும், 3-ல் வெஸ்ட்இண்டீசும் வெற்றி பெற்று இருக்கின்றன. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story