மதுஷ்கா, குசல் மென்டிஸ் இரட்டை சதம் - அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 704 ரன் குவித்து 'டிக்ளேர்'


மதுஷ்கா, குசல் மென்டிஸ் இரட்டை சதம் - அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 704 ரன் குவித்து டிக்ளேர்
x

image courtesy: Sri Lanka Cricket twitter

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 704 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மதுஷ்கா, குசல் மென்டிஸ் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தனர்.

காலே,

இலங்கை- அயர்லாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 492 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கருணாரத்னே 115 ரன்னில் ஆட்டமிழந்தார். நிஷன் மதுஷ்கா 149 ரன்களுடனும், குசல் மென்டிஸ் 83 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாளான நேற்றும் இலங்கை பேட்ஸ்மேன்கள் முழுமையாக கோலோச்சினர். தொடர்ந்து ரன்வேட்டை நடத்திய அவர்களை அயர்லாந்து பவுலர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனது 'கன்னி' சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய மதுஷ்கா 205 ரன்களில் (339 பந்து, 22 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதன் பின்னர் குசல் மென்டிசும், முன்னாள் கேப்டன் மேத்யூசும் கைகோர்த்து அயர்லாந்தின் பந்து வீச்சை பொளந்து கட்டினர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. முதல்முறையாக இரட்டை சதத்தை கடந்த மென்டிஸ் 245 ரன்களில் (291 பந்து, 18 பவுண்டரி, 11 சிக்சர்) மீண்டும் ஒரு சிக்சருக்கு முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார். ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமின் சாதனையை (1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சருடன் 257 ரன்) சமன் செய்யும் அரிய வாய்ப்பை ஒரு சிக்சரில் மென்டிஸ் நழுவ விட்டார். ஆனாலும் இலங்கை வீரர்களில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் நொறுக்கியவர் என்ற திருப்தியோடு வெளியேறினார்.

மறுமுனையில் மேத்யூஸ் 114 பந்துகளில் சதத்தை (100 ரன், 6 பவுண்டரி, 4 சிக்சர்) எட்டினார். அவரது அதிவேக சதம் இதுவாகும். மொத்தத்தில் 15-வது சதமாகும். இலங்கை அணியில் டாப்-4 வீரர்களும் சதம் அடித்துள்ளனர். 146 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் முதல் 4 வீரர்களும் சதம் காண்பது இது 3-வது நிகழ்வாகும். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவும், 2019-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தானும் இத்தகைய சாதனையை படைத்துள்ளன.

மேத்யூஸ் சதத்தை எட்டியதும் இன்னிங்சை முடித்துக் கொள்வதாக இலங்கை கேப்டன் கருணாரத்னே அறிவித்தார். இதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 704 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. மேத்யூஸ் 100 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டெஸ்டில் இலங்கை அணி 700 ரன்னுக்கு மேல் எடுப்பது இது 7-வது முறையாகும்.

பின்னர் 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே அயர்லாந்துக்கு இன்னும் 158 ரன்கள் தேவைப்படுவதால், இந்த டெஸ்டில் இலங்கையின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.


Next Story