பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணி புதிய சாதனை


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை அணி புதிய சாதனை
x

நியூசிலாந்து - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது

கொழும்பு,

நியூசிலாந்து - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 140 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது. அடுத்து இலக்கை நோக்கி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹர்ஷிதா சமரவிக்ரமா, கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆகியோர் களம் புகுந்தனர். அதிரடியாக ஆடிய சமாரி அட்டப்பட்டு 25 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இலங்கை வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.

அவருக்கு பக்கபலமாக நின்ற ஹர்ஷிதா தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விரட்டி இலக்கை கடக்க வைத்தார். 14.3 ஓவர்களில் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்ஷிதா 49 ரன்னுடனும் (40 பந்து, 7 பவுண்டரி), சமாரி அட்டப்பட்டு 80 ரன்னுடனும் (47 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி புதிய சாதனை படைத்தது. அதாவது 20 ஓவர் போட்டியில் விக்கெட் இழப்பின்றி விரட்டிப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 142 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. இது இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றியாகும். முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்த நியூசிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Next Story