"அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள்" - ஹர்பஜன் சிங்


அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள் -  ஹர்பஜன் சிங்
x

அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு கிடைத்த தங்கம் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஆசியக் கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 60 (44) ரன்கள் எடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னில் வெளியேறினார். ஆனால், அடுத்துவந்த முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து வெளியேறினார்.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், பீல்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை அர்ஷ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் யாரும் வேண்டுமென்றே கேட்ச்சை விடுவதில்லை... அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "யாரும் வேண்டுமென்றே கேட்சை கைவிடுவதில்லை. எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.. நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய அணி பற்றி கீழ்தரமாக விமர்சிக்கும் செயல் அவமானத்திற்குறியது. அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்கு கிடைத்த தங்கம்" என்று ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார்.

இதே போல பாகிஸ்தான் அணி வீரர் முகமது ஹபிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் இர்பான் பதான் ஆகியோரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.




Next Story