சுப்மன் கில், விராட் கோலி அதிரடி... இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு..!
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
மும்பை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஓவரின் 2 வது பந்திலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
அதன் பின்னர் சுப்மன் கில்லுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், விராட்கோலி இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் முறையே 92 (11 பவுண்டரி, 2 சிக்சர்) மற்றும் 88 (11 பவுண்டரி) ரன்களில் அவுட்டாகினர்.
தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். அரைசதம் கடந்த அவர் 56 பந்துகளில் 82 (3 பவுண்டரி, 6 சிக்சர்) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 21 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 12 ரன்களிலும் ஜடேஜா 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இதையடுத்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.