சென்னை அணியை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி


சென்னை அணியை எளிதில் வீழ்த்தி ஐதராபாத் அசத்தல் வெற்றி
x
தினத்தந்தி 5 April 2024 11:10 PM IST (Updated: 5 April 2024 11:14 PM IST)
t-max-icont-min-icon

முதலில் பேட் செய்த சென்னை அணி 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஐதராபாத்,

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியும், முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் கேப்டன் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரவீந்திரா 12 ரன்களிலும், கெய்க்வாட் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்னர் கை கோர்த்த துபே - ரஹானே இணை அணி சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இவர்களில் அதிரடியாக விளையாடிய துபே அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ரஹானேவும் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜடேஜா தனது பங்குக்கு 31 ரன்கள் அடிக்க, மறுமுனையில் டேரில் மிட்செல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி 1 ரன் அடித்தார். இதன் மூலம் சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துபே 45 ரன்கள் அடித்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், ஷபாஸ் அகமது, உடன்கட், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி ஐதராபாத் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். அபிஷேக் சர்மா சென்னை அணியின் பந்துவீச்சை தொடர்ந்து பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடக்க விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷக் சர்மா 12 பந்துகளில் 37 ரன்களில் வெளியேறினார்.

மறுபுறம் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஷாபாஸ் அகமது , மார்க்ரம் இருவரும் நிலைத்து ஆடினர். மார்க்ரம் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். இறுதியில் ஐதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. இதனால் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்து 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் நீடிக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

1 More update

Next Story