அபிஷேக், கால்சன் அதிரடி: ஐதராபாத் 197 ரன்கள் குவிப்பு...!
டெல்லிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் 197 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 5 ரன்னில் வெளியேறினார்.
அடுத்துவந்த திரிபாதி 10 ரன்னிலும், கேப்டன் மார்க்ரம் 8 ரன்னிலும், ஹெரி புரோக் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் களமிறக்கிய ஹென்ட்ரிச் கால்சனுடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா 36 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர், அப்துல் சமாத் உடன் ஜோடி சேர்ந்த கால்சன் அதிரடி காட்டினார். கால்சன் 27 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரி உள்பட 53 ரன்கள் குவித்தார். சமாத் 21 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது.
டெல்லி தரப்பில் அந்த அணியின் மிச்செல் மார்ஷ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி தற்போது விளையாடி வருகிறது.