சூர்யகுமார், இஷான் கிஷான் அதிரடி: மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


சூர்யகுமார், இஷான் கிஷான் அதிரடி: மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
x
தினத்தந்தி 3 May 2023 5:50 PM GMT (Updated: 3 May 2023 6:01 PM GMT)

மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மொஹாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்குகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிரபசிம்ரான் சிங் களமிறங்கினர். தொடக்கத்தில் பிரபசிம்ரான் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் தவான், மேத்யூ ஷார்ட் இணைந்து நிலைத்து ஆடினர். தொடர்ந்து தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மேத்யூ ஷார்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா இணைந்து அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். லிவிங்ஸ்டன் 32பந்துகளில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய லிவிங்ஸ்டன் மும்பை அணியின் ஆர்ச்சர் வீசிய ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் பறக்க விட்டார்.

இறுதியில் 20 ஓவர்களுக்கு 3விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. லிவிங்ஸ்டன் 82 ரன்களும் , ஜிதேஷ் ஷர்மா 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ந்து 215 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கேமரோன் கிரீன் 23 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற, சூர்யகுமார் யாதவ் உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி ரன் வேகத்தை உயர்த்தியது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய இஷான் கிஷன் 41 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 71 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இறுதி ஓவர்களில் ஆடிய திலக் வர்மா, 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள், மற்றும் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டு அசத்தினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story