ஐ.சி.சி. சிறந்த 20 ஓவர் போட்டி விருது பட்டியலில் சூர்யகுமார், மந்தனா


ஐ.சி.சி. சிறந்த 20 ஓவர் போட்டி விருது பட்டியலில் சூர்யகுமார், மந்தனா
x

ஐ.சி.சி.யின் இந்த ஆண்டின் சிறந்த 20 ஓவர் போட்டி வீரர், வீராங்கனை விருதுக்கான பட்டியலில் இந்தியாவின் சூர்யகுமார், மந்தனா இடம் பெற்றுள்ளனர்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்கள். இதன்படி இந்த ஆண்டுக்கான விருதுக்குரிய இறுதிபட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் ஆண்டின் சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருதுக்கான பிரிவில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், 20 ஓவர் உலக கோப்பையில் தொடர்நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஜிம்பாப்வே ஆல்-ரவுண்டர் சிகந்தர் ராசா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்தவரான சூர்யகுமார் யாதவ் 2 சதம், 68 சிக்சர் உள்பட 1,164 ரன்கள் (31 ஆட்டம்) குவித்துள்ளார். அத்துடன் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அந்தஸ்தை எட்டியுள்ள அவருக்கு இந்த விருது கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ரசிகர்கள், ஐ.சி.சி. வாக்கு அகாடமி அளிக்கும் ஓட்டு அடிப்படையில் 4 பேரில் ஒருவர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவர்.

மந்தனாவுக்கு கிடைக்குமா?

இதே போல் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு ஸ்மிர்தி மந்தனா (இந்தியா), நிதா தர் (பாகிஸ்தான்), சோபி டேவின் (நியூசிலாந்து), தாலியா மெக்ராத் (ஆஸ்திரேலியா) ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கடந்த ஆண்டு இந்த விருதை பெற்ற மந்தனா தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் மீண்டும் போட்டிக்கு வந்துள்ளார். இந்த ஆண்டில் 23 ஆட்டங்களில் 5 அரைசதத்துடன் 594 ரன்கள் எடுத்துள்ள மந்தனா, சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் 49 பந்துகளில் 79 ரன் விளாசியது வெகுவாக கவர்ந்தது. அந்த ஆட்டத்தில் இந்தியா சூப்பர் ஓவரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான பட்டியலில் இந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை. பாபர் அசாம் (பாகிஸ்தான்), ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா), சிகந்தர் ராசா (ஜிம்பாப்வே), ஷாய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில் இந்த விருதை பெற்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்த முறையும் களத்தில் நிற்கிறார்.

இதன் பெண்கள் பிரிவில் ஷப்னம் இஸ்மாயில் (தென்ஆப்பிரிக்கா), அமெலியா கெர் (நியூசிலாந்து), நாட் சிவெர் (இங்கிலாந்து), அலிசா ஹீலே (ஆஸ்திரேலியா) இடையே போட்டி நிலவுகிறது.


Next Story