சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஷ்ரேயஸ் அதிரடியால் மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி


சையத் முஷ்டாக் அலி கோப்பை: ஷ்ரேயஸ் அதிரடியால் மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி
x

Image Tweeted By BCCIdomestic

விதர்பாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கொல்கத்தா,

சையத் முஷ்டாக் அலி கோப்பையின் அரையிறுதி போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் பஞ்சாப்- இமாச்சல பிரதேச அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இமாச்சல பிரதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து 177 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இமாச்சல பிரதேச அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் விதர்பாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது.

165 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு பிரித்வி ஷா அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவர் 21 பந்துகளில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 73 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் மும்பை அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 169 ரன்கள் வெற்றி பெற்றது. நாளை மறுநாள் நடக்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பை இறுதி போட்டியில் இமாச்சல பிரதேசம்- மும்பை அணிகள் மோதுகின்றன.


Next Story