டி20 உலகக்கோப்பை; சஞ்சு சாம்சன் வெளியே...இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்த இர்பான் பதான்


டி20 உலகக்கோப்பை; சஞ்சு சாம்சன் வெளியே...இந்திய அணியின் விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்த இர்பான் பதான்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 2 April 2024 2:14 AM GMT (Updated: 2 April 2024 4:14 AM GMT)

ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் வரும் மே மாதம் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இதையடுத்து டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அனைத்து வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன், கே.எல்.ராகுல் மற்றும் காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜிதேஷ் சர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் என்றும் ராகுல் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் உலகக் கோப்பையில் தேர்வாவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் டாப் ஆர்டரில் விளையாடுவதன் காரணமாக சஞ்சு சாம்சனை உலகக் கோப்பை அணியில் இருந்து கழற்றி விடுவேன் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இதுவரை ஜிதேஷ் சர்மா இந்தியாவின் கீப்பராக செயல்பட்டு வந்தார். ஆனால் தற்போது பண்ட் வந்துள்ளார். ரிஷப் பண்ட் எந்த சூழ்நிலையிலும் வெற்றியை திருப்பக்கூடிய ஆட்டக்காரர்.

ஆனால் அவர் காயத்திலிருந்து நீண்ட காலம் கழித்து விளையாடுகிறார். அதனால் அவர் எந்தளவுக்கு பிட்டாக இருக்கிறார்? பார்முக்கு வந்து விட்டாரா? என்பதை நீங்கள் முதலில் பார்க்க வேண்டும். இருப்பினும் அவர் மீது இந்த அழுத்தங்களை போட்டு பார்முக்கு வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

ஏனெனில் தற்போது கம்பேக் கொடுத்துள்ள அவரை முதலில் மகிழ்ச்சியாக விளையாட விட வேண்டும். அதனாலேயே அவருடைய பெயர் அங்கே இருக்கிறது. ஆனாலும் உறுதியாக கருத்தவில்லை. அதே போல மிடில் ஆர்டரில் விளையாடி நல்ல பார்மை வைத்திருந்தால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ராகுலை தவிர சிறந்த வீரரை உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

துரதிஷ்டவசமாக ஐ.பி.எல் தொடரில் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்யும் இடத்திற்காக அவரை நான் தேர்வு செய்யவில்லை. ஏனெனில் அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். மறுபுறம் இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி ஆகியோர் கண்டிப்பாக டாப் ஆர்டரில் விளையாடுவார்கள். எனவே சஞ்சு சாம்சன் உலகக் கோப்பை அணியில் பொருந்த மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story