டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா? - வெற்றி பெற 159 ரன்கள் இலக்கு


டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா? - வெற்றி பெற 159 ரன்கள் இலக்கு
x

Image Courtesy: AFP 

உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற தென் ஆப்பிரிக்கா அணி 159 ரன்களை அடிக்க வேண்டி உள்ளது.

அடிலெய்டு,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப்1-ல் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் குரூப்2-ல் இருந்து அரைஇறுதிக்குள் நுழையும் இரண்டு அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் இறுதி கட்ட 3 லீக் ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தால் அரைஇறுதியை எட்டும்.

2 புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கும் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியின் அரைஇறுதி வாய்ப்பு முடிந்து போய் விட்டது. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஸ்டீபன் மைபர்க், மேக்ஸ் ஓடவ்ட் ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு மிகச்சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 58 ரன்னில் பிரிந்தனர். மைபர்க் 37 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டாம் கூப்பர் அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதற்கிடையில் ஓடவ்ட் 29 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து 4 விக்கெட்டுக்கு காலின் அக்கெர்மென், லீடெ களம் புகுந்தனர்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் மகராஜ் 2 விக்கெட்டும், மார்க்ரம், நோர்க்யா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி ஆட உள்ளது. இந்த இலக்கை எட்டிப்பிடித்தால் தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.


Next Story