ஐசிசி டி20 வீரர்கள் தரவரிசை: விராட் கோலி, புவனேஸ்வர் குமார் முன்னேற்றம்..!!

Image Tweeted By @imVkohli
ஆண்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி, புவனேஷ்வர் குமார் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
துபாய்,
சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆண்களுக்கான ஐசிசி டி20 தரவரிசையில் விராட் கோலி மற்றும் புவனேஷ்வர் குமார் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆசிய கோப்பையில் ஐந்து இன்னிங்ஸ்களில் 276 ரன்கள் குவித்த கோலி டி20 பேட்டிங் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 14-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்தியர்களில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ரிஸ்வான் உள்ளார்.
அதே போல் ஆசியக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய புவனேஷ்வர், பந்துவீச்சாளர்களில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்துள்ளார். டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் புவனேஷ்வர் குமார் 11-வது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஹேசில்வுட் உள்ளார்.
அதே போல் டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா 6-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் வங்காளதேச வீரர் சாகிப் அல் ஹசன் உள்ளார். 2-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி உள்ளார்.






