நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், இமாத் வாசிம் சேர்ப்பு


நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், இமாத் வாசிம் சேர்ப்பு
x

Image : AFP 

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசார் மக்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

லாகூர்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 14-ந் தேதி முதல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் மூன்று டி20 போட்டிகள் முறையே ராவல்பிண்டியில் வருகிற 18, 20, 21-ந் தேதிகளிலும், கடைசி இரு ஆட்டங்கள் லாகூரில் 25, 27-ந் தேதிகளிலும் நடக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடையை அனுபவித்த வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் மற்றும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 2020, 2023-ம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற இவர்கள் இருவரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை ஏற்று சமீபத்தில் ஓய்வு முடிவில் இருந்து விடுபட்டு பயிற்சி முகாமுக்கு திரும்பி இருந்தனர். எதிர்பார்த்தபடியே இருவருக்கும் அணியில் இடம் கிடைத்து இருக்கிறது. அண்மையில் பாகிஸ்தான் வெள்ளை நிற பந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அசார் மக்மூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் ஐ.பி.எல். போட்டி காரணமாக நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், டிரென்ட் பவுல்ட், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா உள்பட முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடும் பாகிஸ்தான் 20 ஓவர் போட்டி அணி வருமாறு:-

பாபர் அசாம் (கேப்டன்), அப்ரார் அகமது, அசம் கான், பஹர் ஜமான், இப்திகர் அகமது, இமாத் வாசிம், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது அமிர், முகமது இர்பான் நியாஜி, நசீன் ஷா, சைம் அயூப், ஷதப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, உஸ்மா மிர், உஸ்மான் கான், ஜமான் கான்.


Next Story