ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிராக தமிழக அணி நிதான ஆட்டம்


ரஞ்சி கிரிக்கெட்டில் சவுராஷ்டிராவுக்கு எதிராக தமிழக அணி நிதான ஆட்டம்
x

கோப்புப்படம் 

இந்த போட்டியில் களம் இறங்கியிருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 17 ஓவர்கள் பந்து வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான கடைசி லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணியில் சாய் சுதர்சன், ஜெகதீசன் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

ஜெகதீசன் 6 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு தமிழக வீரர்கள் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இதனால் ரன் விகிதம் ஆமை வேகத்தில் நகர்ந்தது. பாபா அபராஜித் 45 ரன்னிலும் (132 பந்து, 5 பவுண்டரி), சாய் சுதர்சன் 45 ரன்னிலும் (122 பந்து, 4 பவுண்டரி), பிரதோஷ் ரஞ்சன் பால் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

நேற்றைய முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. 22 ஓவர்களில் ரன் எதுவும் எடுக்காமல் மெய்டனாக்கினர். பாபா இந்திரஜித் 45 ரன்னுடனும், விஜய் சங்கர் 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை நிரூபிக்க இந்த போட்டியில் களம் இறங்கியிருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 17 ஓவர்கள் பந்து வீசி 36 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story