டேரில் மிட்செல் அபாரம்: நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நாட்டிங்காம்,
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் ஜோ ரூட்டின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களான வில் யங் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து டாம் லாதம் 26 ரன்னிலும், டேவன் கான்வே 46 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர்.
அடுத்து இறங்கிய டேரில் மிட்செல், டாம் பிளெண்டல் ஆகியோர் பொறுப்புடன் ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர். முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 318 ரன்கள் எடுத்த நிலையில், தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இருவரும் சதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து ஆடிய இந்த ஜோடியில் டாம் பிளெண்டல் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பிரேஸ்வெல் 49 ரன்களும், ஜேமிசன் 14 ரன்களும், சவுதி 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த டேரில் மிட்செல் 200 ரன்கள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் 190 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். முடிவில் போல்ட் 16 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 145.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 553 ரன்கள் குவித்தது.
இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜாக் குருவ்லி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அலெக்ஸ் லீசுடன், ஓலி போப் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். தற்போது இங்கிலாந்து அணி 15 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.






