வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 421 ரன்கள் எடுத்து டிக்ளேர்
இந்திய அணி 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
டொமினிகா,
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்களில் 150 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீசின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். ரகீம் கார்ன்வால் 19 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. ரோகித்தும், ஜெய்வாலும் தொடர்ந்து நிதானமாக ஆடினர். ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு துரத்தியடித்தனர். 22 இன்னிங்சுக்கு பிறகு தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய ஜோடி என்ற சிறப்புடன் வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி தந்தனர். எதிரணியின் ஸ்கோரை கடந்து முன்னிலையும் பெற்றனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா முதல்இன்னிங்சில் விக்கெட் இழக்காமல் முன்னிலை காண்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டிலேயே சதம் விளாசி கவனத்தை ஈர்த்தார். மும்பையைச் சேர்ந்த 21 வயதான ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டிலேயே சதம் நொறுக்கிய 17-வது இந்தியர் என்ற மகத்தான சாதனை பட்டியலிலும் இணைந்தார்.
மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 10 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 103 ரன்களுக்கு கேட்ச் ஆகி வெளியேறினார்.
3ம்நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரகானே 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஜடேஜா 37 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அத்துடன் இந்திய அணி 271 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வருகிறது.