டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகள் - சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா


டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகள் - சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா
x

Image Courtesy: AFP

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

ராஜ்கோட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோரின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டும், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜடேஜா இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை அவுட் ஆக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 281வது விக்கெட்டாக அமைந்தது.

இந்த விக்கெட் மூலம் ஜடேஜா சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அந்த சாதனை என்னவெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகளை எடுத்த ஐந்தாவது இந்திய பவுலர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக இந்திய மண்ணில் அணில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளையும், அஸ்வின் 347 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகளையும், கபில் தேவ் 219 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story