மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டு பிளிஸ்சிஸ் நியமனம்...!


மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டு பிளிஸ்சிஸ் நியமனம்...!
x

அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற லீக் போட்டி முதல் சீசனாக இந்தாண்டு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தற்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகங்களும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை அறிமுகப்படுத்தி நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெற இருக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 என்கிற லீக் போட்டிகளானது முதல் சீசனாக இந்தாண்டு நடைபெற இருக்கின்றன. இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கிறது.

அதில் சிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்ற ஒரு அணி உருவாக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் நகரை தலைமையாக கொண்ட இந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கே முதன்மை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு சிஎஸ்கே அணியில் இருந்த உதவி பயிற்சி நிர்வாகிகள் அனைவரும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவும் இணைந்துள்ளார்.அதேபோன்று சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் பிராவோவும் இந்த தொடரில் ஒரு வீரராக விளையாடுகிறார்.

அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாடி வரும் டேவான் கான்வே மற்றும் மிட்சல் சான்ட்னர் ஆகியோரும் இந்த தொடரில் விளையாடுகின்றனர். அதேபோன்று ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், ஜெரால்டு கோட்சே ஆகியோரும் தற்போது இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் நியமனம் செய்யப்படுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





Next Story