சென்னை ராயப்பேட்டையில் 2 நாட்கள் வைக்கப்படும் கிரிக்கெட் உலகக் கோப்பை
உலகக் கோப்பை இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்காக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வைக்கப்படுகிறது.
சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கோப்பை பல்வேறு நாடுகளில் பயணித்து வருகிறது. இந்த உலகக் கோப்பை இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தது.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் அரங்கில் உலகக் கோப்பைக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ, உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, உதவி தலைவர் ஆடம் சேட், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோப்பையை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இந்த உலகக் கோப்பை இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வைக்காக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வைக்கப்படுகிறது. அதன் பிறகு பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.