கடைசி பந்து 'நோ-பால்' ஆனதால் வெற்றி பறிபோனது... ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் புலம்பல்


கடைசி பந்து நோ-பால் ஆனதால் வெற்றி பறிபோனது... ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் புலம்பல்
x

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்து நோ-பால் ஆனதால் வெற்றி பறிபோனதாக சாம்சன் கூறினார்.

ஜெய்ப்பூர்,

முடிவை மாற்றிய நோ-பால்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான திரில்லிங்கான ஆட்டத்தில் 215 ரன் இலக்கை ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தின் வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட போது, வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் ஷர்மா வீசிய இறுதிபந்தில் அப்துல் சமத் கேட்ச் ஆனார். ஆனால் அடுத்த சில வினாடிகளில் அது 'நோ-பால்' என்று அறிவிக்கப்பட, ராஜஸ்தானின் வெற்றி கொண்டாட்டம் சிதைந்தது.

இதன் பின்னர் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தை அப்துல் சமத் (17 ரன், நாட்-அவுட்) சிக்சருக்கு அனுப்பி தங்களுக்கு நம்ப முடியாத ஒரு வெற்றியை தேடித்தந்தார். ஐ.பி.எல். வரலாற்றில் 200-க்கு மேலான இலக்கை ஐதராபாத் விரட்டிப்பிடித்தது இதுவே முதல் முறையாகும். 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன் (7 பந்து) விளாசிய கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஐ.பி.எல்.-ல், மிக குறைந்த பந்தில் பேட்டிங் செய்து ஆட்டநாயகன் விருதை பெற்றவர் இவர் தான்.

சாம்சன் கருத்து

6-வது தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

இது போன்ற நெருக்கமான, எதிர்பாராத முடிவுகளை கொடுக்கும் ஆட்டங்கள் தான் ஐ.பி.எல். கிரிக்கெட்டை இன்னும் சிறப்புடையதாக்குகிறது. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வரை நீங்கள் வெற்றி பெற்றதாக ஒரு போதும் நினைக்க முடியாது. எந்த ஒரு சூழலிலும் எந்த ஒரு அணியாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்பதை அறிவேன். சந்தீப் ஷர்மா மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. இது போன்ற நிலைமையில் தான் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றியை தேடித்தந்தார். அதே போன்று இன்றும் செய்து காட்டினார். ஆனால் அந்த நோ-பால் எங்களுக்குரிய முடிவை பாழாக்கிவிட்டது. நோ-பால் வீசிவிட்டால் மீண்டும் ஒரு பந்து போட வேண்டும் அவ்வளவு தான். மற்றபடி நோ-பால் குறித்து அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பது சந்தீப்புக்கு தெரியும். கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் வெற்றியை கொண்டாடத் தொடங்கிய போது நே-பால் என்று அறிவித்ததும், அடுத்த சில வினாடிகளில் அவரது மனநிலை கொஞ்சம் மாறியிருக்கும்.

எளிதான தொடர் அல்ல

இலக்கை நிர்ணயித்த பிறகு வெற்றி பெற்றால் மட்டுமே மகிழ்ச்சி அடைய முடியும். 214 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியாதது ஏமாற்றமே. முதலில் பேட்டிங்கில், இன்னும் அதிகமான ரன்களை எடுத்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள். இது நல்ல கேள்வி. ஆனால் அதற்குரிய பதில் எனக்கு தெரியாது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் குறிப்பாக, இது போன்ற தொடர்களில் விளையாடுவது வாழ்க்கையில் எளிதான விஷயம் அல்ல. சாதிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு ஆட்டத்திலும் நமது அபாரமான திறமையை வெளிப்படுத்தியாக வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டு சரிவில் இருந்து மீண்டு வர முயற்சிப்போம்.

இவ்வாறு சாம்சன் கூறினார்.

சமத் சொல்வது என்ன?

கடைசி பந்தில் சிக்சர் விளாசி ஹீரோவாக மின்னிய ஐதராபாத் வீரர் அப்துல் சமத் கூறுகையில், 'அதிர்ஷ்டவசமாக கடைசி பந்து நோ-பால் ஆனது. பந்தை தூக்கியடித்து விட்டு வேகமாக ஓடி கிரீசை எட்டிய போது, நடுவர் 'நோ-பால்' சிக்னல் காட்டியதும், எதிர்முனையில் நின்ற யான்செனை திரும்பி போகச் சொன்னேன். அதனால் தான் நான் மீண்டும் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சரியான பகுதியில் பந்தை விரட்டுவதற்கு காத்திருந்தேன். மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில் எனது முயற்சிக்கு பலன் கிடைத்தது' என்றார்.


Next Story