20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்- ரிக்கி பாண்டிங்


20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்- ரிக்கி பாண்டிங்
x

20 ஓவர் கிரிக்கெட்டில் ஷமியை விட சிறந்த பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய 20 ஓவர் போட்டி அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிவுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து கேட்கிறீர்கள். முகமது ஷமி, நீண்ட காலமாக இந்திய அணியின் பிரமாதமான பவுலராக விளங்குகிறார். அவரது பலம் எது என்று பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட் தான். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஷமியை விட சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒருவேளை 4-வது வேகப்பந்து வீச்சாளர் தேவையாக இருந்திருந்தால், அந்த வாய்ப்பு ஷமிக்கு கிடைத்திருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அனேகமாக இந்திய அணியினர் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் வருவார்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்காது என்ற போதிலும் கூட அவர்கள் சுழற்பந்து வீச்சுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவார்கள்.

ஆசிய கோப்பை போட்டி மட்டுமல்ல எந்த ஒரு தொடரிலும் இந்திய அணியை தோற்கடிப்பது கடினம். ஆசிய கோப்பை போட்டியில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவே வலுவாக இருக்கிறது. இந்த ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று கருதுகிறேன். இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு பாண்டிங் கூறினார்.


Next Story