பிரியாவிடை கொடுக்க திரண்டனர்... கொல்கத்தாவில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு டோனி நன்றி.!


பிரியாவிடை கொடுக்க திரண்டனர்... கொல்கத்தாவில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு டோனி நன்றி.!
x
தினத்தந்தி 24 April 2023 10:13 PM GMT (Updated: 24 April 2023 11:49 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் இருந்து அவர் இந்த ஆண்டு விடைபெற்றால் கொல்கத்தாவில் அவரது கடைசி ஆட்டம் இதுவாக தான் இருக்கும்.

கொல்கத்தா,

சென்னை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. டிவான் கான்வே (56 ரன்கள்), ரஹானே (ஆட்டம் இழக்காமல் 71 ரன்கள்), ஷிவம் துபே (50 ரன்கள்) அரைசதம் விளாசினர். பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட்டுக்கு 186 ரன்களே எடுத்து 5-வது தோல்வியை சந்தித்தது.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த டோனி

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனியிடம், மஞ்சள் கொடியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிக அளவில் ஈடன்கார்டன் மைதானத்துக்கு வந்து இருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் 'இங்கு திரளாக குழுமியிருக்கும் ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. அவர்கள் எனக்கு பிரியாவிடை அளிக்க இப்படி திரண்டு இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த போட்டியில் தங்களது சொந்த அணியான கொல்கத்தாவின் ஜெர்சிக்கு மாறிவிடுவார்கள் என்று நம்புகிறேன்' என்றார். ஐ.பி.எல். போட்டியில் இருந்து அவர் இந்த ஆண்டு விடைபெற்றால் கொல்கத்தாவில் அவரது கடைசி ஆட்டம் இதுவாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் குறித்து மேலும் டோனி கூறுகையில், 'மைதானத்தின் ஒருபக்க பவுண்டரி குறைவான தூரம் கொண்டதாகும். இதனால் பவர்-பிளேயில் விக்கெட் வீழ்த்தி நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். அதன்படியே பவர்-பிளேயில் வேகப்பந்து வீச்சாளர்களும், மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை கச்சிதமாக செய்தனர். ஒரு வீரர் காயம் அடைந்து விட்டால் அவரால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நான் அறிவேன். அப்படிப்பட்ட நேரத்தில் தயாராக இருக்கும் இளம் வீரருக்கு வாய்ப்பு அளித்து ஊக்குவிக்க வேண்டும். எங்கள் அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ரஹானேவுக்கு பாராட்டு

ரஹானேவின் திறமை என்ன என்பது எங்களுக்கு தெரியும். அவரை போன்ற ஒருவரை விருப்பப்படும் விதத்தில் பேட் செய்ய அனுமதிக்க வேண்டும். நாங்கள் அவர் விரும்பும் பாணியில் ஆட சுதந்திரம் கொடுப்பதுடன், அவர் எந்த வரிசையில் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்பதை பார்த்து அதனையும் செய்து கொடுத்து இருக்கிறோம். ஒரு அணியாக செயல்படும் போது ஒரு சில வீரர்கள் தங்களின் இடத்தை மற்றவர்களுக்கு தியாகம் செய்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியமனதாகும்' என்றார்.

முந்தைய ஆட்டத்தின் முடிவில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்த 41 வயதான டோனி தற்போது பிரியா விடை என்று கூறி தனது ஓய்வு காலம் நெருங்குவதை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story