முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் புகுந்த திருடர்கள்; லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் கொள்ளை


முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் புகுந்த திருடர்கள்; லட்சக்கணக்கில் வெளிநாட்டு பணம் கொள்ளை
x

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் வீட்டில் புகுந்த திருடர்கள் லட்சக்கணக்கில் மதிப்பிலான அமெரிக்க டாலரை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.



கராச்சி,


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நடப்பு ஆண்டின் ஜனவரி 3-ந்தேதி ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், தனது மனைவியுடன் ஹபீஸ் வெளியே சென்றிருந்தபோது, நள்ளிரவில் அவரது வீட்டை உடைத்து கொள்ளை கும்பல் ஒன்று உள்ளே புகுந்து உள்ளது.

இதன்பின்னர், வீட்டில் இருந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை திருடி சென்று விட்டது. இதுபற்றி அறிந்து, அவரது மாமனாரான சாஹித் இக்பால் என்பவர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

2018-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ஹபீஸ் கடைசியாக 2019-ம் ஆண்டு லார்ட்சில் நடந்த ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பை போட்டியில் பங்கேற்றார்.

எனினும், 2020-ம் ஆண்டில் டி20 போட்டியில் விளையாடும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹபீஸ், தனது அதிரடியை வெளிப்படுத்தினார். உலக அளவில் அந்த ஆண்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்று சாதனை ஏற்படுத்தினார்.

55 டெஸ்ட் போட்டிகளில் 3,652 ரன்கள் குவித்து உள்ளார். ஒரு நாள் போட்டியில் 10 சதங்களுடன் 6,617 ரன்களை சேர்த்து உள்ளார். 119, டி20 போட்டிகளில் விளையாடி 2,514 ரன்கள் குவித்து உள்ளார். அவற்றுடன் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளிலும் விளையாடி 1,730 ரன்கள் குவித்து உள்ளார்.


Next Story