உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம் பெறாததற்கு இதுவே காரணம் - டி வில்லியர்ஸ்


உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சாஹல் இடம் பெறாததற்கு இதுவே காரணம் - டி வில்லியர்ஸ்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 9 Sep 2023 4:49 AM GMT (Updated: 9 Sep 2023 5:00 AM GMT)

இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

கேப்டவுன்,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் அணித்தேர்வு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் அணியில் இடம் பெறாத வீரர்கள் குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலின் பெயர் உலகக்கோப்பை அணியில் இடம்பெறாதது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் இடம் பெறாதது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,

தற்போது இந்தியாவில் நிறைய சுழற்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர். தற்போதைய இந்திய அணியில் உள்ள டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து விட்டால் பின் வரிசையில் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் இருக்க வேண்டும் என்று இந்திய அணி நினைக்கிறது.

அதன் காரணமாக சாஹல் நீக்கப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர்கள்.

அவர்களை போன்ற வீரர்களையே இந்திய அணி எதிர்பார்க்கிறது. ஒருவேளை இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் ஆறு முதல் ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் பின்வரிசையில் பேட்டிங் தெரிந்த பவுலர்கள் இருந்தால் அது அணிக்கு கை கொடுக்கும் என்று கருதுகிறார்கள். இதனாலேயே சாஹல் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story