டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: சேலம்-திருச்சி, திண்டுக்கல்-மதுரை அணிகள் மோதல்


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்: சேலம்-திருச்சி, திண்டுக்கல்-மதுரை அணிகள் மோதல்
x

கோப்புப்படம் 

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் சேலம் ஸ்பார்டன்ஸ்-பால்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

திண்டுக்கல்,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

கோவையில் நடந்த முதல் கட்ட சுற்றில் 6 ஆட்டங்கள் நடைபெற்றன, நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (சேலம், திருப்பூர் அணிக்கு எதிராக), நெல்லை ராயல் கிங்ஸ் (மதுரை, கோவை அணிக்கு எதிராக) அணிகள் தங்களது 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முறையே முதல் 2 இடங்களுடன் வீறுநடை போடுகின்றன. திண்டுக்கல் டிராகன்ஸ் (ஒரு வெற்றி) 3-வது இடத்திலும், கோவை கிங்ஸ் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி) 4-வது இடத்திலும் உள்ளன.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஓய்வு நாளாகும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் நடைபெறுகிறது.

சேலம்-திருச்சி மோதல்

இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு தொடங்கும் 7-வது லீக் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது. திருச்சி அணியில் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது முதல் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த இவ்விரு அணிகளும் முதல் வெற்றியை குறிவைத்து வரிந்து கட்டும்.

இதேபோல் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்-ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியும், மதுரை அணியில் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் அங்கம் வகிக்கின்றனர்.

நேரடி ஒளிபரப்பு

திண்டுக்கல் அணி தனது சொந்த மண்ணில் ஆடும் முதல் ஆட்டம் இதுவாகும். தொடர்ந்து 2-வது வெற்றியை வசப்படுத்தி உத்வேகத்தை தொடர திண்டுக்கல் அணியும், வெற்றி கணக்கை தொடங்க மதுரை அணியும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story